The way Home 2002
The Way Home 2002,-பாட்டிக்கும் பேரனுக்குமான உணர்வைச் சொல்லும் அற்புதமான திரைப்படம்.
Year:2002
Language:South korean
Director:Lee Jeong-hyang
இத் திரைப்படம், சிறந்த படத்திற்காகவும் -சிறந்த திரைக்கதைக்காவும் Grand bell விருதைப் பெற்றுள்ளது.இவ்விருது,தென்கொரிய நாட்டின் மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.ஆஸ்கர் விருதுக்கு நிகராகவும் மதிக்கப்படுகிறது.
உலகின்,மிகச்சிறந்த பத்து படங்கள் என பட்டியலிடச் சொன்னால்,அதில் இத்திரைப்படமும் அடங்கும்.
பாட்டிக்கும்,பேரனுக்குமான சம்பவங்களின் தொகுப்பே இத் திரைப்படத்தின் கதை.இப்பதிவை முழுவதுமாக படித்து விட்டு படம் பார்த்தாலும் சுவாரஸ்யத்திற்கு எவ்வித பாதிப்புமில்லை.
படத்தின் ஆரம்பக் காட்சியில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அவளுடைய மகனும் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அவளின் முகத்தில் நாளைய பற்றிய கவலை ஓடுவது நமக்கும் தெரிகிறது.அந்தக் கவலை எதுவும் அறியாத 8 வயது பருவத்தில் இருக்கிறான்,அவளுடைய மகன் சங்-வூ.சுவாரஸ்யமாக வீடியோ கேம் விளையாடிக்கொண்டே வருகிறான்.
வெளியூர் பேருந்திலிருந்து இறங்கி,மேலும் இரண்டு உள்ளூர் பேருந்துகளில் பயணம் செய்து அவளுடைய தாயின் வீட்டை அடைகிறார்கள்.சங்-வூ உள்ளூர் பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுதே, அக்கிராமத்து மக்களின் பேச்சும் நடவடிக்கையும் அவனுக்கு பிடிக்காமல் போகிறது.சிறிது நேர பயணத்திலேயே முகத்தை சுழிப்பவன், இரண்டு மாத கால கோடை கால விடுமுறையை எப்படித்தான் கழிக்கப் போகிறானோ, அவன்.
சங்வூ-வின் அம்மா 17 வயதில் தாயை விட்டுப் பிரிந்தவள்.அதன்பிறகு,எவனோ ஒருவனை திருமணம் செய்து, இவனுக்கு தாயாகி,கணவனைப் பிரிந்து, தேநீர் கடையை நடத்தி, நஷ்டம் ஆகி இப்பொழுது வேறொரு வேலையை தேடும் முயற்சியில் இருக்கிறாள்.அந்த முயற்சிக்கு மகனின் அருகாமை தொந்தரவாக இருக்கும் என எண்ணி,தன்னுடைய தாயிடம் மகனை விட்டுச் செல்லவே இப்பொழுது பயணப்பட்டு வந்திருக்கிறாள்.
மகன் சங்வூ பஸ்ஸை விட்டு இறங்கும் பொழுதே அடம் பிடிக்கிறான்.தென்கொரியாவின் தலைநகரான சியோல் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன்,ஒதுக்குப்புறமான ஒரு மலைக்கிராமத்தில் இருக்க முடியுமா?அழுகிறான்;அடம் பிடிக்கிறான்;அம்மாவை எட்டி உதைக்கிறான்.அவளும் அவனை நாலு அடி போட்டு, தன்னுடைய தாயிடம் தன் நிலையை விளக்கிவிட்டு, இரண்டு மாதம் கழித்து வந்து அழைத்துச் செல்வதாக சொல்லி விட்டு செல்கிறாள்.
பாட்டியை கண்டதிலிருந்தே பேரனுக்கு பிடிக்கவேயில்லை.அவள் ஆசையாக பாசத்தோடு தொட்டாலும் இவன் வெடுக்கென கையை தட்டி விடுவான்.உடனே,தன் நெஞ்சைத் தடவி தன் உணர்வைச் சொல்வாள் பாட்டி.
கூன் விழுந்த கிழவி அவள்.வயது எப்படியும் 85 இருக்கும்.காது கேட்கும்.பேச வராது.பாட்டியும், பேரனும் சைகை மொழியிலேயே பேசிக்கொள்வார்கள்.
பாட்டி,எது செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்.அவனுடைய அம்மா வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்ற குளிர்பானங்களையும், தின்பண்டங்களையும் மட்டுமே தின்று கொண்டிருப்பான்.வீடியோ கேம் விளையாடுவதிலேயே முழ்கி விடுவான்.அவனை தொந்தரவு பண்ணக் கூடாது என்பதற்காக,அவனை எழுப்பாமல் அவனைச் சுற்றியுள்ள குப்பைகளை மட்டுமே பெருக்குவாள்.
அவன் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பாட்டி துணி தைப்பதற்கான ஊசியையும், நூலையும் அவனருகே கொண்டு செல்வாள்.அவன்,பாட்டியை வேண்டா வெறுப்பாக பார்த்துக் கொண்டே ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடுப்பான்.
கண்டதையும் சாப்பிட்டதால் வயிற்றைக் கலக்கிவிடும் அவனுக்கு.இரவு நேரத்தில் பாட்டியை எழுப்புவான்.பாட்டி,அவனுக்கேற்ற மாதிரியே ஒரு ஜாடியை அவன் மலம் கழிப்பதற்காக வைத்து விடுவாள்.அவன் கழிக்கும் வரையில், அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து காத்துக் கொண்டிருப்பாள்.இப்படி,அவன் என்னதான் பாட்டியை புறக்கணித்தாலும் பாட்டி அவன் மீது அன்பை மட்டுமே செலுத்துவாள்.
ஒரு நாள்,வீடியோகேம் பேட்டரியும் தீர்ந்து விடும்.பாட்டியிடம் காசு கேட்பான்.இருந்தால்தானே கொடுப்பாள் அவள்.
பாட்டி,நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொண்டையில் உள்ள வெள்ளி கிளிப்பை நைசாக உருவி எடுத்துக் கொண்டு,அதைக் கொடுத்து பேட்டரி வாங்கலாம் என்கிற எண்ணத்தோடு கடைகடையாய் ஏறி இறங்குவான்.பேட்டரி கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பி வருவான்.
அக்கிராமத்தில் உள்ள விறகு பொறுக்கும் சிறுவனுடனும், சிறுமியுடனும் இவனுக்கு பழக்கம் ஏற்படும்.ஒருநாள்,அந்தச் சிறுமி, “ஒன் கூட விளையாடலாம்னு நேத்து பூராம் தேடினேன்.நீ இல்லே.நாளைக்கி நான் வரேன்.சேர்ந்து விளையாடலாம்.’,என்று சொல்லி விட்டு சென்றவுடன், அந்தச் சிறுமியை மறுநாள் சந்திக்கும் ஆசையில் மிதப்பான்.
நம்ம ஊர் குழந்தைகள் மாதிரி அங்கேயும் அம்மா அப்பா விளையாட்டும் உண்டு.😀😀அது சம்மந்தப்பட்ட காட்சியும் இருக்கு.
மறுநாள்,கண்ணாடியில் பார்த்தால் அவனுடைய நெற்றியில் உள்ள தலைமுடி அவனுக்கு மட்டும் அசிங்கமாக படுகிறது.பார்க்கும் நமக்கு அப்படி தோன்றவில்லை.பாட்டியிடம் முடியை சிறிதாக வெட்டச்சொல்கிறான்.அவள் பாவம்,முடி வெட்ட கற்றுக்கொண்டு வந்தாளா,என்ன?தனக்குத் தோன்றியபடி முடியை வெட்ட,இவன் தூங்கி விழித்துப் பார்க்க சட்டியை கவிழ்த்தது போல் தலைமுடி ஆகிவிடுகிறது.கண்ணாடியைப் பார்த்து ஓவென்று அழ ஆரம்பிக்கிறான்.பாட்டியை கண்டபடி திட்டுகிறான்.இப்படி,பாட்டியின் மீது அவனுக்கு தொடர் கோபம் இருந்து கொண்டே வருகிறது.
ஒரு நாள் பாட்டி, ‘ஒனக்கு என்ன சமைச்சுக் கொடுக்க ‘,எனக் கேட்க,’ஒனக்கு என்ன தெரியும்?ஒண்ணுமே தெரியாது’,என கோபத்தோடு சொல்லி விட்டு புத்தகத்தை காண்பித்து விளக்கி, ‘கெண்டக்கி சிக்கன் செய்யத் தெரியுமா’,என்பான்.பாட்டி புரியாமல் விழிக்க ,இவன் செய்கையில் காண்பிக்க, அவளும் செய்கையில் விளக்க, இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு, பாட்டி தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்று விட்டு மழையில் நனைந்தபடி கோழி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து சமைக்கிறாள்.
தூங்கிக் கொண்டிருக்கும் அவனை எழுப்பி சாப்பிடச் சொல்கிறாள்,பாட்டி.அவனும் ஆர்வத்தோடு எழுந்திருக்கிறான்.கிண்ணத்தில் உள்ள அவித்த கோழியைப் பார்த்து ஏமாற்றத்தின் உச்சிக்கே செல்கிறான்.பாட்டியை கண்டபடி திட்டுகிறான்.பாட்டி அவனை சமாளிக்க முடியாமல் முழிக்கிறாள் பாவம்.இரவில்,பசியின் கொடுமையால் எழுந்து அவித்த கோழி அனைத்தையும் ஒரு பிடி பிடிக்கிறான் சங்வூ.
பாட்டியின் மீது கோபத்துடனே இருக்கும் பேரனின் மனதையும் மாற்றக் கூடிய சம்பவங்கள் சில நடக்கும்.
ஒரு நாள் பாட்டி தான் விளைவித்த பூசணிக்காய்களை விற்று வர பேரனையும் அழைத்துச் செல்கிறாள்.
அங்கு,பாட்டி பூசணிக்காய்களை வைத்துக் கொண்டு விற்க சிரமப்படுவதைப் பார்த்து முதன்முறையாக பாட்டியின் மீது பரிதாப்படுகிறான் சங்-வூ.எப்படியோ,பாட்டி அனைத்தையும் விற்று முடித்து அவனுக்கு Shoe வாங்கித் தருகிறாள்.ஓட்டலுக்குச் சென்று அவன் விரும்பியதை வாங்கித் தருகிறாள்.
பேருந்தில் உட்கார்ந்து இருக்கும் பேரனைப் பார்த்து வேறு என்ன வேண்டும் என சைகையில் கேட்கிறாள்.அவன் சற்று யோசித்து வண்டியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைக் காட்டுகிறான்.பாட்டி அந்தக் குழந்தையின் கீழே உள்ள கவரை எடுத்துக் கொண்டு செல்கிறாள்.
அங்கு,பாட்டியின் வயதை ஒத்த கிழவி ஒருத்தி கடை வைத்திருக்கிறாள்.அவர்களுக்கிடையில் நீண்ட கால நட்பு என்பதை அவர்களின் உரையாடலின் வழியே அறிந்து கொள்கிறோம்.பாட்டியின் பேரனைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறாள்.பாட்டி பிஸ்கெட் பாக்கெட் கவரைக்காண்பித்து இரண்டு கேட்க,அவள் பை நிறைய போட்டு அனுப்புகிறாள்.பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கிறாள்.’பேரனுக்கு கொடுத்து சந்தோஷப்படுத்து என்கிறாள்.பணம் இல்லாதவர்களிடம் மட்டுமே கருணை நிரம்பி வழிகிறது.
பேருந்தில் சங்-வூ தன் நண்பனுடனும் தோழியுடனும் உட்கார்ந்து இருக்கிறான்.பாட்டி,தான் வாங்கி வந்த தின்பண்டங்களை அவனிடம் கொடுக்கிறாள்.வாங்கிக் கொள்கிறான்.பாட்டி கொடுக்கும் லக்கேஜ்ஜை மட்டும் வாங்க மறுக்கிறான்.தட்டிவிடுகிறான்.காரணம் தோழி அருகில் இருக்கும் பொழுது பாட்டியுடன் பயணம் செய்வதை விரும்பாமல்.
வண்டி கிளம்பி விடுகிறது.இவன்,ஊருக்கு வந்து பாட்டி கொடுத்த தின்பண்டங்களை எல்லாம் தின்ற பிறகு பாட்டியின் ஞாபகம் வந்து பஸ்-ஸ்டாப்பில் வந்து காத்திருக்கிறான்.பஸ் வருகிறது.ஆவலோடு பார்க்கிறான்.ஒரே ஒரு பயணியைத் தவிர எவரும் இறங்கவில்லை.வண்டி திரும்ப,பாட்டி கூன்விழுந்த முதுகோடு பையைப் பிடித்த படி தளர்ந்த நடையில் வருகிறாள்.அவள் நடந்து வருவதைப் பார்த்து கவலைப்படுகிறான்.பேரன் இல்லாத பொழுது தனக்கு எதற்கு பஸ் பிரயாணம் என்று எண்ணியே பேருந்து பயணத்தை தவிர்த்திருக்கிறாள் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
பாட்டி சுமந்து வரும் பையை வாங்கிக் கொள்கிறான்.அந்தப் பையில் தான் மறுநாள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த சாக்கோ பார் சாக்லேட்டுகளை மகிழ்ச்சியோடு போடுகிறான்.
ஒரு நாள் பாட்டி எழுந்திருக்க நீண்ட நேரம் ஆகிவிட்ட காரணத்தால், இவன் பயந்து போய் பாட்டியையே பார்த்துக் கொண்டிருப்பான்.நெஞ்சில் காது வைத்துக் கேட்பான்.நெற்றியில் ஈரத் துணியை வைப்பான்.முழுவதுமாக பொத்தி விடுவான்.கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருப்பான்.பாட்டி கொஞ்சம் திரும்பி படுத்தவுடன்தான் சற்று Relax ஆவான் சங்வூ.பாட்டியின் மீது அவன் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாய்வதை இயக்குநர் காட்சியின் அழகால் நமை வசீகரித்து இருப்பார்.
மறுநாள்,பாட்டி விளைவித்த காய்கறிகளைள எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று, ஒரு அழகான பொம்மையை வாங்கிக் கொண்டு வருவான்.அக்காட்சிகளை இரண்டே ஷாட்டில் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் Lee jeong-hyang.
ஒரு சின்ன டிராலியில் சாமான்கள் வைத்து கட்டப்பட்டிருக்கும்.சங்-வூ அதை தள்ளிக் கொண்டு மேட்டில் ஏறுவான்.அடுத்த low angle shot-ல் இடது கையில் பெரிய பொம்மையையும், வலது கையில் காலி டிராலியையும் கீழே தள்ளிக் கொண்டு வருவான்.
இதே காட்சியில்தான் அவனுடைய பாட்டியின் அன்பை முழுமையாக புரிந்து கொள்வான்.பாக்கெட்டில் வைத்திருந்த கவரை பிரித்துப் பார்ப்பான்.அதில் வீடியோ கேம் கருவியும்,பேட்டரி வாங்குவதற்கான பணத்தையும் வைத்திருப்பதைப் பார்த்து பாட்டியின் அன்பை நினைத்து அழ ஆரம்பிப்பான்.அருமையான காட்சியது.
பாட்டியின் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட வேளையில், அம்மா அவனை ஊருக்கு அழைத்துச் செல்வதற்கான தகவலோடு அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது.
நாளை,அவன் அம்மாவோடு ஊருக்குப் போகவேண்டிய நிலையில் முதல் நாள் இரவு, சங்-வூ அவனுடைய பாட்டிக்கு எழுதவும் படிக்கவும் கற்றுத் தருகிறான்.’ஒனக்கு ஒடம்பு சரியில்லன்னா Blank-ஆ லெட்டர் போடு.நான் புரிஞ்சுப்பேன்.ஒன்னையை ஓடி வந்து பாப்பேன்.”இப்படி ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு படம் வரைந்து பாட்டியிடம் கொடுப்பான்.பாட்டி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே எழுதுவாள்.நமக்கும் கண்ணீர் துளி எட்டி நிற்கும்.
மறுநாள்,அம்மாவுடன் ஊருக்குப் போவதற்காக சங்-வூ பாட்டியுடன் Bus stop-ல் நின்று இருக்கிறான்.பேருந்து வருகிறது.
சங்-வூ ஜன்னல் ஓரம் சோகமாக உட்கார்ந்து இருக்கிறான்.பாட்டி,ஜன்னலை தட்டினாலும் திரும்ப மாட்டேன்கிறான்.பேருந்து கிளம்பியவுடடன் பேருந்தின் பின்பக்கம் ஓடிவந்து பாட்டியைப் பார்த்து கையசைக்கிறான்.கண்கலங்குகிறான்.பாட்டியைப் பிரிந்த ஏக்கத்தில் நாமும்தான்.
பாட்டி,கூன் விழுந்த முதுகோடு வீட்டை நோக்கி நடந்து கொண்டே இருக்கிறாள்.
பாட்டியின் மிச்ச நாட்கள் பேரனுடன் கழித்த அந்த இனிய நாட்களின் நினைவுகளோடு கழியும் என நம்பி நாமும் பாட்டியிடமிருந்து பிரிகிறோம்.
‘This film dedicated all grandmothers’எனும் எழுத்துக்களைப் போட்டு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர்.
இயக்குநர் லீ ஜியாங் யங், ஒரு பெண் இயக்குநர்.இந்தப் படத்தை இயக்கிய பொழுது அவருக்கு 32 வயதுதான்.32 வயதிலேயே உலக அளவில் பெயர் பெற்று விட்டார்.
இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் பேரன் பேத்திகளை தாத்தா பாட்டிகளிடம் நெருங்குவதையே தவிர்க்கின்றனர்.
அவர்களுக்கிடையில் ஏதாவது பிரச்னை என்றால் பேரன்-பேத்திகளுக்கும், தாத்தா -பாட்டிகளுக்கும் உள்ள பிணைப்பிற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.
அன்பிற்காக ஏங்கும் அந்த முதிய குழந்தைகள், பாசத்திற்காக ஏங்குவதை சில குடும்பங்களில் பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.
தாத்தா-பாட்டிகளுக்கும்,பேரன் பேத்திகளுக்கும் இடைவெளியை உண்டாக்குபவர்கள் ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்பது என் ஆசை.
இத் திரைப்படத்தை உலகசினிமா ரசிகர்கள் அனைவருமே பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
Add Comment