Entertainment

Thalaikuthal Tamil Movie Review 🎥

Thalaikoothal Tamil Movie Review
Thalaikoothal Tamil Movie Review
மலையாள சினிமாக்களை மெச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழில் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளுடன் உலுக்குகிற கனத்துடன் ஒரு படம். சத்தமில்லாமல் வந்து போயிருக்கிறது.

மலையாள சினிமாக்களை மெச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழில் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளுடன் உலுக்குகிற கனத்துடன் ஒரு படம். சத்தமில்லாமல் வந்து போயிருக்கிறது. படத்தில் ஜாக்கெட் போடாத நாயகியை முதல்மரியாதை ராதாவை நினைவுப்படுத்துவதாக சொல்லி படத்தை தரம் குறைந்த விமர்சனத்திற்கு கீழே வைத்தனர்.

வயதாகி படுத்த படுக்கையில் சுமையாகி பீ, மூத்திரத்தை மட்டும் வெளிதள்ளுவதை தாங்க முடியாமல் கருணை மனம் கொண்டு தலைக்கு ஊத்தி கொல்லும் தமிழ் இரக்க வழக்கத்தை களமாக கொண்ட படம். ஏற்கனவே இதே களத்தில் இரண்டு, மூன்று படங்கள் வந்த போதும் கொல்ல விருப்பமில்லாத மகனுக்கும் கொல்ல சொல்லும் சுற்றத்துக்குமிடையேயான போராட்டத்தை சொல்லுமிடத்தில் வித்தியாசமானது. ஆரம்பத்தில் பீ, மூத்திரம் வழிந்த தந்தையின் உடலை எடுத்துக் கொண்டு கழுவி விடும் காட்சியிலேயே நமக்கு சகிப்புதன்மையில்லாமல் முகசுளிப்பு வருவதை பார்த்து மனம் சிரித்துவிடும்.

நிகழ்கால யதார்த்த காட்சியமைப்பும் நடிகர்களின் நடிப்பும் ஒரு பக்கம். கடந்தகால கதை சொல்லலில் காதலை புனைவுடன் கனவு போல சொல்லியிருப்பது ஒரு பக்கம் என ரசிக்க வைக்கிறது.

தமிழ் கிராமத்தையும், வீடுகளையும் காண்பித்த மலையாள படமான ந.நே.ம படங்களை பற்றி பேசிய அளவுக்கு கூட இந்த படம் பேசப்படவில்லை. படம் முழுக்க கிராமத்தின் மனிதர்கள், வீடுகள் என உண்மைக்கு நெருக்கமான படம் பார்க்கும் உணர்வை தருகிறது. போகிற போக்கில் சாதி, பெண்சிசுகொலை, உயிரின் முடிவு பற்றி பேசுகிறது. கடந்தகாலத்திலும், கனவு காட்சிகளிலும் அங்கங்கே கற்பனைகள் ரசிக்கும்படியானது.

படத்தில் மகனுக்கும் தந்தைக்கும் சிறுவயது உரையாடல் காட்சிகள் மட்டுமே இருக்கும். காரணம், பெரிதாய் தியாக தகப்பனாக இல்லாமல் மனதில் தங்கும் தகப்பனாக இருந்தாலே போதும் கடைசி காலத்தில் தந்தையை மகன் சுமக்கும் அன்புக்கு என்று பார்வையாளன் புரிந்து கொள்ள போதுமானது.

தனக்குத்தான் தந்தை. தன் மனைவிக்கும் ஒரு வருடம் ஆன பிறகும் அப்படி நினைக்க முடியாதே. அவள் பேசுவதின் நியாயங்களும் புரிந்துக் கொள்ள கூடியது. சண்டைக்கு நடுவே கணவன், மனைவியை நெருங்கும்போதான அவசரமும், அவமானமும் உடலுறவுக்கு தயாராகும் இடமும் அழகானது.

இதெல்லாம் விட தமிழ் சினிமாவில் இதுவரை வராத ஒரு முத்தக்காட்சி உள்ளது. ஆங்கில படங்களின் முத்தம் இப்போதுதான் தமிழில் வந்திருக்கிறது. முத்தம் முடிந்து உதடு பிரிந்து போகும் போது எச்சிலின் இழை நூலாக ஒட்டிக்கொண்டே பிரியும். இதெல்லாமே தமிழ் பார்வையாளனுக்கு புதிதுதான். குடும்பங்கள் கொண்டாட வேண்டியதை முத்தக் காட்சி தடுத்திருக்கும் போல.

குழந்தைக்கு பீ,மூத்திரம் கழுவி விடுவதில் ஒரு சகிப்பு வரும். குழந்தை சிரித்து விளையாடும். ஆனால் வயதான ஒரு மவுன உடலின் பீ, மூத்திரத்தை கழுவ பெரிய சகிப்புத்தன்மை தேவை. அதை பிள்ளைகளுக்கு இருக்குமளவுக்கு மனதில் தங்கும் வளர்ப்பும், உறவாடலும் முக்கியம். அது இல்லாத பெற்ற இயந்திரங்களின் கடைசி காலம் சுமையாகத்தான் இருக்கும்.

படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு, இசை, வசனம், ஒளிப்பதிவு இவைகள்
படத்தை கனமிக்கதாக நிறுத்துகிறது.

இவன் ரா.பூபாலன்.

About the author

Avatar of Bhoopalan Shanthosh

Bhoopalan Shanthosh

As a director/actor in Tamil film, Bhoopalan Raman gained experience in the industry.

The motto he lives by is "Hard work leads to success."

Add Comment

Click here to post a comment