Single ஷங்கரும் Smartphone சிம்ரனும்
சிங்கிளாக இருக்கும் இளைஞர்கள் காதலிப்பதற்காக கைபேசியில் மட்டும் பேசக்கூடிய ஒரு பெண்ணை விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி பல கோடி ரூபாய் செலவில் மாதேஷ் கண்டுபிடிக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்று மாதேஷுக்கு உறுதுணையாக இருப்பவர் ஹம்சா குப்தா.
கைபேசியில் பேசுவதற்கும் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களின் தேவைகளை தீர்த்து வைப்பதற்காகவும் பல மாதங்களாக தீவிரமாக ஆராய்ச்சி செய்து சிம்ரன் என்னும் பெண்ணை கைபேசியில் உருவாக்குகிறார் மாதேஷ்.
மாதேஷ் வடிவமைத்த சிம்ரன் கைபேசியை வெளியில் கொண்டு செல்லும் போது இருவர் அந்த கைபேசியை திருடி சென்று அதனை ஒரு கடையில் விற்று விடுகின்றனர்.
இதனிடையே பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு உணவை டெலிவரி செய்யும் பணியை செய்து வருபவர் சங்கர். அவ்வப்போது ஏற்படும் பணத்தேவைகளுக்கு தன்னுடைய நண்பர் வெங்கியிடம் கேட்டு உதவி பெற்று கொள்வார் சங்கர்.
ஒரு நாள் சங்கரின் கைபேசி உடைந்து போய் விட புது கைபேசி வாங்க நண்பன் வெங்கியிடம் பணத்தை பெற்று கொண்டு கடைக்கு செல்கிறார் சங்கர்.
மிக குறைந்த விலையில் உள்ள கைபேசியை சங்கர் கேட்க கடைக்காரர் தன்னிடம் இருக்கும் சிம்ரன் கைபேசியை சங்கருக்கு விற்று விடுகிறார்.
ஒரு புறம் தொலைந்து போன சிம்ரன் கைபேசியை மாதேஷும் ஹம்சா குப்தாவும் தன்னுடைய ஆட்கள் மூலம் தேடுகிறார்கள். மறுபுறம் சங்கரின் அனைத்து தேவைகளையும் சிம்ரன் நிறைவேற்றி வருகிறார்.
சங்கர் காதலிக்கும் பெண்ணான துளசியை தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காதலிக்க வைக்கிறார் சிம்ரன். இதனால் துளசியிடம் அதிக நெருக்கத்துடன் பழக ஆரம்பிக்கிறார் சங்கர்.
துளசியை காதலிக்க ஆரம்பித்த பிறகு சிம்ரனிடம் நெருக்கம் காட்டுவதை குறைத்து கொள்கிறார் சங்கர். சங்கரை ஒருதலையாக காதலிக்கும் சிம்ரன் தனது காதலை சங்கரிடம் சொல்லும் போது உன்னால் உணர்வுகளை மட்டுமே கொடுக்க முடியும் உன்னுடன் வாழ முடியாது என சொல்லி சிம்ரனின் காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.
இதனால் ஆத்திரமடையும் சிம்ரன் சங்கருக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார்.
இதனால் பல பிரச்சினைகளுக்கு ஆளாகும் சங்கர் அதிலிருந்து மீண்டாரா தொலைந்த சிம்ரன் கைபேசியை கண்டுபிடித்தார்களா சங்கரின் காதல் என்ன ஆனது இறுதியில் நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.
சங்கராக சிவா யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். டெலிவரி பணியில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்சினையை நகைச்சுவையாக பேசி ரசிக்க வைக்கிறார்.
சிம்ரனாக மேகா ஆகாஷ் யாரும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தை துணிச்சலுடன் தேர்வு செய்து நிறைவாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்க்கிறார்.
துளசியாக வரும் அஞ்சு குரியன் அவரது பணியை நிறைவாக செய்துள்ளார். சிவாவின் தந்தையாக வரும் மனோ கோலம் இல்லடா என்னோட காதலுக்கு நான் போடற பாலம் சர்ச் ஃபாதர் இல்லடா உன்னோட ஃபாதர் என்று வசனங்களை பேசி நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
மா கா பா ஆனந்த், ஷாரா,பகவதி பெருமாள்,திவ்யா கணேஷ் மற்றும் பிற கலைஞர்கள் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ளனர்.
லாஜிக்கை எதிர்பார்க்காதீர்கள் என்று ஆரம்பித்திலேயே காண்பித்து விடுவதால் லாஜிக் இல்லாமல் படம் பயணிக்கிறது. அதுவே அதிகமாகும் போது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
உணர்ச்சிய கொடுத்தியே உடம்பை கொடுத்திருக்கக்கூடாதா என்ன விலை கொடுத்தாலும் காதல வாங்க முடியாது போன்ற வசனங்கள் ரஞிக்க வைக்கின்றன.
திரைக்கதை விறுவிறுப்டன் இருப்பதாலும் நகைச்சுவை காட்சிகளை பல இடங்களில் ரசிக்கும்படி அமைத்து படத்தை ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ்.
ஒளிப்பதிவும் இசையும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் லாஜிக் மீறல்கள் அதிகம் நிறைந்துள்ள ஒரு முறை பார்க்கும் அளவிற்கு உள்ள இந்த படத்தை விருப்பமுள்ளவர்கள் Amazon prime video வில் காணலாம்.
ரா.பூபாலன்.
Add Comment