Purusa Pethram 2023
மலையாள தேசத்திலிருந்து மறுபடியும் ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமா என்று கொஞ்சம் தயக்கத்துடன் பார்க்க ஆரம்பித்தால், ” இல்ல இது வேற ஜானர் ” என்று துவக்கத்திலேயே சொல்லி சற்று ஆறுதல் படுத்திவிடுகின்றனர்.
முதல் பாதி படம் முழுக்க மெல்லிய பிளாக் ஹியூமர் இரண்டாம் பாதி சீரியசான திரில்லர் என்று கச்சிதமாக பிரித்து படம் பயணிக்கிறது.
கொச்சின் பக்கம் செலானல்லூர் என்ற ஒரு சிறிய ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் தான் கதைக்களம்.
அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிற ஏழெட்டு காவலர்களை பொறுத்த வரைக்கும் அவர்களுடைய எஸ் ஐ செபாஸ்டியன் , வீரம் மிகுந்த ஒரு சூப்பர் ஹீரோ.
ஆனால் அந்த செபாஸ்டியன் ஒரு சராசரி பீஸ் தான் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
ஒரு நாள், அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிணம் ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் கிடைக்கிறது. அதை கைப்பற்றி ஒரு மூன்று நாள் அரசு மருத்துவமனையில் வைத்திருந்து விட்டு, அதைக் கேட்டு யாரும் வராததால் பிணத்தை புதைத்து விடுகின்றனர். ஏழு நாட்கள் வரை பிணத்தை புதைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டம் என்றாலும், இது பெரிய பிரச்சனை இல்லை இந்த மாதிரி கேஸ் கள் அடிக்கடி வருபவைதான் என்பதாலும், மருத்துவமனை நிர்வாக சிக்கல்கள் காரணமாகவும் நான்காவது நாளே அந்த பிணத்தை புதைத்து விடுகின்றனர்.
ஆனால் அடுத்து இரண்டு நாட்கள் கழித்து சூசன் என்ற ஒரு 35 வயது என்ஆர்ஐ பெண்மணி , நியூஸ் பேப்பர் அறிவிப்பை வைத்து அந்த பிணம் தன்னுடைய கணவன் தான் என்று கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள்.
அவள் சொல்லும் அங்க அடையாளங்கள் மற்றும் சான்றுகள் ஓரளவுக்கு பொருந்திப் போகிறது. இருந்தாலும் செபாஸ்டின் அந்த சடலம் அவளுடைய கணவன் இல்லை என்று உறுதியாக சொல்கிறார். ஆனால் சூசன், தான் எப்படியாவது அந்த சடலத்தை நேரில் பார்த்து உறுதிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் வாழ்நாள் முழுக்க ஒருவித குற்ற உணர்ச்சியில் சிக்கி விடுவேன் என்று பிடிவாதமாக நிற்கிறாள்.
புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லும் செபஸ்டின், அப்படி செய்ய நிறைய சிக்கலான நடைமுறைகள் உள்ளது என்றும் சொல்லி சூசனை வாரக் கணக்கில் அலைய விடுகிறார்.
சீனியர் கான்ஸ்டபிள் திலீப் என்பவர் தான் பிணத்தை புதைக்கும் பணியை அருகில் இருந்து கவனித்தவர். அப்போது அவர் பிணத்தின் கையிருந்த ஒரு மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் உருவிவிடுகிறார். இந்த தடயத்தை வெளியில் சொன்னாலே அந்த சடலம் சூசனின் கணவன் இல்லை என நிரூபணம் ஆகிவிடும். ஆனால் அவரால் அதை சொல்ல முடியவில்லை.
சூசனுடைய மாமனார் (அதாவது இறந்து போனவனின் அப்பா) ஒரு லாயர் என்பதால் , இவர்கள் மாதக்கணக்கில் கோர்ட் , கேஸ் என்று அலைந்து திரிந்து ஒரு வழியாக புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு பெறுகிறார்கள்.
சடலத்தை புதைத்த இரண்டு வெட்டியான்களுமே தற்போது ஊரில் இல்லை. ஒருவன் விபத்தில் சிக்கி ஐ சி யு வில் இருக்கிறான். இன்னொருவன் எங்கே போனான் என்று தெரியவில்லை. சீனியர் கான்ஸ்டபிள் திலீப்பும் எந்த இடத்தில் உடல் புதைக்கப்பட்டது என்ற விஷயத்தில் சொதப்புகிறார். எனவே மொத்த சுடுகாட்டையுமே தோண்ட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
பிரச்சனை இத்துடன் முடிந்ததா என்றால் இல்லை. அதன் பின்னர் அடுத்தடுத்த பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன. இந்த பிரச்சனைகளை செபாஸ்டினும், திலீப்பும் எப்படி சமாளித்தார்கள் என்பதே இரண்டாம் பாதி படத்தின் கதை.
முதல் பாதியில் பெரிய திருப்பங்கள் ஏதுமின்றி படம் கொஞ்சம் மெதுவாகவே செல்கிறது. நிறைய காட்சிகளில் மெல்லிய நகைச்சுவை இருந்தாலும், பெரிதாக ஈர்க்கவில்லை. அதற்குக் காரணம் அதிக பரிச்சயம் இல்லாத நடிகர்கள் மற்றும் படத்தின் நேட்டிவிட்டி போன்றவையாக இருக்கலாம். தேவை இருக்கிறதோ இல்லையோ, படத்தில் புதுப்புது கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
சில காட்சிகள் நன்றாக சிரிக்க வைத்தன. அதே போல் செபாஸ்டின் – சுஜாதா சம்பந்தப் பட்ட காட்சிகள் நன்றாக இருந்தன.
(செபஸ்டின் 45 வயதை கடந்தும் சிங்கிள் என்பதால் , தர்மப்படி அவருக்கு ஒரு செட்டப் இருக்கிறது. அவள் தான் சுஜாதா)
கதையில் சூசன் அறிமுகமானவுடன் படத்தின் விறுவிறுப்பு தொடங்குகிறது , பின்னர் இறுதி வரைக்குமே நன்றாக இருந்தது. பணியில் நடைபெறும் ஒரு சிறு அலட்சியம் எப்படி அடுத்தடுத்த பிரச்சினைகளை உண்டாக்குகிறது என்பதை டீடெயில் ஆக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் அந்த இரண்டு டிவிஸ்டு களும் ரசிக்கும்படி இருந்தன.
போலீஸ் பணியில் உள்ள கஷ்டங்கள், அவமானங்கள். வருடம் முழுக்க நன்றாக பணியாற்றினாலும் ஒரு சிறிய தவறுக்காக அவர்களை இப்படி அலைக்கழிக்க வேண்டுமா என்ற கேள்வியையும் முன் வைக்கிறது.
ரா.பூபாலன்.
Add Comment