‘அகிலன்’,பெயருக்கேற்றவாறு திரையுலகை ஆண்டானா?
என்னமோ தெரியலே,திரைப்படத்தில் மட்டும் ‘அகிலன்’,எனும் பெயர் ராசியில்லாத பெயராக இருக்கிறது.
இயக்குநர் பாலா அவர்கள், ‘சேது’,திரைப்படத்திற்கு முன்பு, ‘அகிலன்’,எனும் பெயரில் 1992-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பூஜையோடு நின்று போனது.அப்படத்தின் நாயகனாக செல்வாவும்,ராஜஸ்ரீ நடித்த கதாபாத்தில் ரோகிணியும்,அண்ணன் கதாபாத்திரத்தில் சிவக்குமார் அவர்களும் நடிக்கவிருந்தார்கள்.
பிறகு,2012 -ஆம் ஆண்டு,’அகிலன்’,எனும் பெயரில் டாக்டர் சரவணன் நாயகனாக நடிக்க ஆசைப்பட்டு தயாரிப்பாளராக வந்தார்.நாயகனாகவும் தோன்றினார்.
படம் வந்ததும் தெரியாது;கடந்து போனதும் தெரியாது.இவர்தான்,கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினாராக தேர்வானார்.பிறகு,தாமரை வாசம் பிடிக்க சென்றார்.வாசனை பிடிக்காமல் திரும்ப வந்தார்.திரும்பவும் எங்கே போனார் என தெரியவில்லை.😀😀😀
ஆனால்,’அகிலன்’,எனும் பெயரில்தான் புகழ்பெற்ற எழுத்தாளரும் இருக்கிறார்.இவருடைய எழுத்தில் உருவான, ‘சித்திரப்பாவை’,நாவல் இலக்கிய உலகின் மிகப்பெரும் விருதான ஞானபீட விருதைப் பெற்றது.இந்நாவல் 1988-ஆம் ஆண்டில் தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாகி பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டையும் பெற்றது.
இப்படி,இந்த அகிலன் எனும் பெயருக்குப் பின்னால் பல தகவல்கள் அடங்கியுள்ளது.
‘அகிலன்’,டைட்டில் இந்தக் கதைக்கு பொருத்தம்தான்.ஆனால்,எடுத்துக் கொண்ட கதையில் தெளிவாக சொன்னார்களா என்பது அவர்களுக்கே இந்நேரம் புரிந்திருக்கும்.
அகிலன்-ஆள்பவன்-ஆள நினைப்பவன்.
கடலையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரநினைப்பவன்.அந்த நினைப்பிற்கும் லட்சியத்திற்கும் காரணம் உண்டு.தன்னுடைய தந்தையின் நிறைவேறாத குறிக்கோளை அடைவதற்காக மகன் போராடி வெற்றி கொள்வதுதான் கதை.
கதைக்களமெல்லாம் நன்றாகத்தான் இருக்கு.அந்தக் களத்தில் Screeplay-ல் இவர்கள் சரியாக விளையாடவில்லை என்பதுதான் சோகம்.
படம் முழுக்க துறைமுகத்திலேயே எடுத்திருக்கிறார்கள்.படம் ஆரம்பித்தவுடன் வித்தியாசமான படத்திற்கு வந்திருக்கிறோம் என நினைப்பு முதல் 15 நிமிடத்திலேயே முடிந்து போகிறது.அதன் பிறகு,திரைக்கதை தறிகெட்டு எங்கெங்கோ ஓடி நமை சோர்வடையச் செய்து தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.
குறைந்தது படத்தில் 65 காட்சிகளாவது இருக்கும்.ஒரு காட்சி கூட நம் மனதை தைக்கவில்லை என்றால் இவர்கள் எல்லாம் யாருக்காக படம் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
பெரிய பட்ஜெட்,பெரிய நாயக நடிகர்,ஏகப்பட்ட துணை நடிகர்கள் இருந்தும் பார்வையாளர்களை வெற்றி கொள்ள முடியலே.நான்கே நான்கு முதன்மையான கதாபாத்திரங்களை வைத்து நம் மனதை ஆக்கரமிக்கிறார்கள்,’கொன்றால் பாவம்’,திரைப்படத்தின் மூலம்.
சினிமா ரசிகர்களை ரசிகர்களை ஈர்க்க அதிக பொருட் செலவு தேவையில்லை என்பதை, ‘கொன்றால் பாவம்’,திரைப்படமும்,’அகிலன்’,திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி சம்மந்தப்பட்டவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளது என உறுதியாக சொல்லலாம்.
படத்தின் வெற்றிக்கு நட்சத்திர தேர்வும் தீர்மானிக்கிறது என்பதை எவருமே மறுக்க முடியாது.இத் திரைப்படத்தில் Sub-Inpector-ஆ பவானி பிரியா சங்கர்.அதுவும் நக்கலான போல்டான கேரக்டராம்.அந்தக் கதாபாத்திரத்திற்கு இவரை தேர்ந்தெடுத்தது முதல் தவறு.அந்தக் கதாபாத்திரத்தின் தெளிவின்மையும் மற்றொரு தவறு.நல்ல வேளை,இரண்டு பேருக்கும் டூயட் பாடலை தவிர்த்து விட்டார்கள்.😀😀
அகிலன்,கப்பலில் மெக்கானிக் வேலை பார்ப்பவன்.கூடவே ஒருவனுக்கு அடியாளாகவும் வேலைபார்க்கிறான்.அவன் அனுப்பும் சட்டவிரோத பொருட்களை சாமார்த்தியமாக அனுப்புவது இவன் வேலை.
ஒரு நாள்,அவனை மீறி இவன் தனித்து இயங்கும் பொழுது அவனுக்கும் இவனுக்கும் பிரச்னை உண்டாகிறது.இந்தப் பிரச்னையை கடந்து தகப்பனின் கனவையும் மகன் நிறைவேற்ற வேண்டும்.
எதிரியை வென்று லட்சத்திற்காக போராடி வெல்லும் இளைஞனின் கதைதான், ‘அகிலன்’.
நமக்கு காண்பித்த இந்த திரைக்கதை காட்சிகளை தயாரிப்பாளரிடம் சொல்லி எப்படி OK பண்ணினார் இந்த இயக்குனர் என்பதுதான் எனது ஆச்சர்யம்.நடிகரிடம்,’நீங்கநான் King of the Ocean ‘,என்று சொன்னவுடனேயே ‘ ‘ஆஹா சூப்பருப்பு’,என்று அந்த நடிகரும் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன்.😀😀
என்னதான் நாலு சுவற்றுக்குள் தயாரிப்பாளரையும் நடிகரையும் வாய்ஜாலத்தால் ஏமாற்றினாலும் திரையரங்கத்துக்குள்ளே ரசிகனை மட்டும் ஏமாற்றவே முடியாது.
தியேட்டரை விட்டு வெளியேறியவுடனேயே ஒரு இளைஞனின் கமெண்ட்,’கடைசி வரைக்கும் எவன் Hero, எவன் வில்லன்னே தெரியலடா!’.
ரா.பூபாலன்.
Add Comment